சென்னை:பீகார், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாது ஏன்? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தவெக முதல் மாநில மாநாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மாநில அரசுகளும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்த அரசியலமைப்பு சட்டம் வழி வகை செய்கிறது. இதனடிப்படையில் தான் பீகார், கர்நாடகா மாநில அரசுகள் ஏற்கனவே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை சேகரித்துள்ளனர். தெலங்கானா மாநில அரசு 50 நாட்களில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது. அந்த கணக்கெடுப்பு ஆய்வு மீது சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் விவாதமும் நடத்தியுள்ளது.
இதையும் படிங்க:இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது ஒன்று புது விஷயமல்ல.. அவையில் புள்ளிவிவரங்களுடன் கூறிய அமைச்சர்!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என தமிழக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்தி மற்ற மாநிலங்களை பின்பற்ற தயங்குவது ஏன்? இத்தனைக்குப் பிறகும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியாவுக்கு வழிகாட்டியவர் பெரியார். பெரியாரே எங்கள் தலைவர் என்று சொல்லும் தற்போதைய ஆட்சியாளர்கள் சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே தமிழக ஆட்சியாளர்கள் முன் வைத்து வருகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் ஒன்றிய, தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் என்பதை மக்கள் அறிவர். இனியும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாக கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை,"என்று கூறியுள்ளார்.