சென்னை:தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழைத்திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
அதுகுறித்து வெளியான அரசாணையில், '' அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000 என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000 என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000 என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000 என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.