சென்னை:சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கூவம் ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள ரூ.7 கோடி செலவில் 2.75 ஏக்கர் பரப்பளவில் 'பாய்மர படகு விளையாட்டு அகாடமி' அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளது. மேலும், 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் படகு இல்லம் இருந்த இடத்தில் பாய்மர படகு அகாடமி அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தற்போது அந்த இடத்தில் கீழ்த்தளம் மற்றும் முதல் தளம் என்று இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.
அதேபோல கட்டடத்தின் முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை அமைய உள்ளது. இந்த திட்டத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்கள், பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டும் அல்லாது, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் நான்கு தமிழக வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பாய்மர படகு போட்டி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க:Heat Stroke: கால்நடைகளுக்கும் வெக்கை வாதம்: தற்காத்துக்கொள்ள சில வழிகாட்டுதல்கள்.!