சென்னை:ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் இடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பீலா ராஜேஷ் தாஸ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி அதனை செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பங்களாவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 21-ஆம் தேதி தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், தனது கணவரும், முன்னாள் சிறப்பு டிஜிபியுமான ராஜேஸ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் ராஜேஷ் தாஸ் மீது அத்துமீறி புகுந்து பிரச்சனை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் பீலா வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் ராஜேஷ்தாஸை இன்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவன் நீதிமன்றம் உத்தரவிட்டது.