தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழர்களின் 'துத்தேரி' தான் இன்றைய 'ட்ரம்ப்பட்' "; தமிழர் வரலாற்றை பறைசாற்றும் ஈரோடு கண்காட்சி! - TAMIL NADU CULTURAL EXHIBITION

ஈரோட்டில் உலகத்தோற்றம் முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர்களின் வரலாறு குறித்த தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியை வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் இன்று துவக்கி வைத்து இசைக்கருவிகளை பார்வையிட்டார்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள்
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இசைக்கருவிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 6:58 PM IST

ஈரோடு: தமிழகப் பெண்கள் செயற்களம் தமிழரண் மாணவர்கள் அமைப்பின் சார்பில் ஈரோட்டில் 16வது ஆண்டாக தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் உலகத் தோற்றம் முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு, தமிழர் உணவு, விளையாட்டு, ஓவியம், பழந்தமிழரின் இசைக்கருவிகள், பொருள்கள், காசுகள் மற்றும் மண் சார்ந்த இயற்கை மூலிகைகள் போன்றவை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து, கருவிகள் வரலாறு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து தமிழர்கள் கற்காலம் குறித்த வரலாற்று அடங்கிய புகைப்படத்துடன் கூடிய தகவல்களை அமைச்சர் பார்வையிட்டார். இக்கண்காட்சியைக் காண வந்த கல்லூரி மாணவர்கள் தமிழர்கள் வரலாற்றை அறிந்து வியப்படைந்ததுடன், அவர்களின் வாழ்வியல் சூழல், வேட்டையாடும் முறைகள், பயன்படுத்திய உடைகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டு, கலைகள்:கண்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, தடிக்கோல், நொண்டி, பல்லாங்குழி, உயரம் தாண்டுதல், வட்டகல் தூக்குதல், ஜல்லிக்கட்டு போன்றவையும், மயிலாட்டம், ஓயிலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் உள்ள சிறப்பு உணவுகள், பொருட்கள் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கண்காட்சியின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கெளரிகாளம், பூரிகை பெரியது, எக்காளம், திருச்சின்னம், துத்தேரி, குழல், கோமுகவாத்யம், முகவீனை ஒத்து, நாதசுரம், கொம்புத்தாரை ஆகியவற்றை பார்வையாளர்கள் இசைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னர்களின் வாழ்க்கை வரலாறு: கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள் கூறுகையில், “உலகம் தோன்றிய இருந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களது தொழில் குறித்து அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. முந்தைய பண்பாட்டு முறைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் கண்காட்சியில் பண்டைய காலங்களில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கு போன்ற முறை தெளிவாக தெரிந்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. சேரன், சோழன், பாண்டியன், கட்டபொம்மன் போன்ற மன்னர்களின் வாழ்க்கை வரலாற்று கண்முன்னே வந்தது” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது" - பெண் துறவிகள்!

100 வகையான இசைக்கருவிகள்:இதனை தொடர்ந்து இந்த கண்காட்சியில் பாரம்பரிய இசைக்கருவிகளான முரசு, தண்ணுமை, பறை, பித்தனை உடல், தவில், கொட்டுத்தவில், உருட்டு பித்தளை, திமிலை, பம்பை, கொட்டு, துடி, மர உடுக்கை, உடுக்கை வெங்கலம், தமருகம் போன்ற கருவிகளை காட்சிப்படுத்திய இசைக்கலைஞர் கோசை நகரான் சிவக்குமார் கூறுகையில், “இங்கு 100 வகையான இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் மனரீதியாக மக்களுக்கு பலன் உள்ளது.

அதிர்வுகளை வைத்து இசைக்கருவிகள் கண்டுபிடிப்பு:மேற்கத்திய இசைக்கருவிகளை விட சிறந்த கருவிகள். கருவிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதில் வரும் ஒலி வெவ்வேறாக இருக்கும். ஒலியின் அதிர்வுகளை வைத்து முன்னோர்கள் இசைக்கருவிகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவிகள் வயது இன்னும் அறியமுடியாத ஒன்றாக இருந்து வருகிறது. 1917ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரத்தில் பழந்தமிழரின் இசைக்கருவிகள் பற்றி கூறப்பட்டு உள்ளது.

பெரும் பழமை:அதெல்லாம் ஆய்வு செய்தார் 11 ஆயிரத்து 445 ஆண்டுகளுக்கு முன்பாக செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவ்வளவு பழமை வாய்ந்தது இந்த இசைக்கருவிகள். தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்த காலத்தில் இருந்து இந்த இசைக்கருவிகள் உள்ளது. ஆனால் இத்தகைய இசைக்கருவிகளை இந்த கால தலைமுறைக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்ததில் பெரும் பங்கு பெற்றோர்களுக்கு உள்ளது. மேற்கத்திய இசையின் மோகத்தால் இந்த இசைக்கருவிகள் மீது குழந்தைகளை நாட்டம் செலுத்தவிடவில்லை.

உருமாறிய இசைக்கருவிகள்:மேற்கத்திய நாடுகள் கண்டுபிடித்த அனைத்து இசைக்கருவிகளும் தமிழக இசைக்கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு துத்தேரி இசைக்கருவி 6ஆம் நூற்றாண்டில் இருந்து உள்ளது. இது ட்ரம்ப்பட் (Trumpet) என சில மாறுதல்கள் அடைந்து மேற்கத்திய இசைக்கருவியாக நம் நாட்டில் நுழைந்தது. மேற்கத்திய இசை கருவிகள் எல்லாம் நமது கருவிகள் அடிப்படையில் உருவான ஒன்று தான்.

தமிழர்கள் 140 வகையான இசைக்கருவிகளை இசைத்து உள்ளார்கள். இன்றைய இளைஞர் சமுதாயம் திரையுலக பாடல்களை பாடுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு பண் என்றால் என்ன என்று தெரியாத நிலைமை தான் உள்ளது. திரையுலக இசை கலைஞர்கள் பண்ணை படி இசைத்தால் தமிழ் பண்பாடு வளரும். முன்பு தமிழகம் சேரன், சோழன், பாண்டியன், தொண்டை நாடு என நான்கு பிரிவுகளாக இருந்தது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கடினமாக இருந்தது.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் அனைத்து வட்டாரங்களும் இணைந்து நமது இசைக்கருவிகள் ஆராய்ந்து இசைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கூட வேறு மாநில பாரம்பரிய இசைக்கருவிகள் உலக அளவில் செல்ல, அந்த மாநில மக்கள் அந்த கருவிகளுக்கு கொடுக்கும் மரியாதை, முக்கியத்துவம் மேலோங்குகிறது. அதே போன்று தமிழகத்தில் நடப்பது இல்லை. பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய இசைக்கலைஞர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கொடுப்பதில்லை” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details