சென்னை: சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரதமர் நேரில் சென்று சந்திக்காதது குறித்தும், இது குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.
அதானி லஞ்சம் குற்றசாட்டு
போராட்ட மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, '' அதானி இந்திய அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதானி தொழில் எந்த விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதானி தொழில் நியாயமான முறையில் நடக்கிறதா, எத்தனை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார் என்பது குறித்து அமெரிக்கா கூறி உள்ளது.
மத்திய அரசு, அதானி என்ற ஒற்றை நபருக்காக தேசத்தை அடகு வைக்கிறது. பங்குச்சந்தை ஊழலுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதானி பெரிய ஊழல் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என அந்நிய நாடுகள் சொல்லும் போது ஏன் இந்தியா மறுக்கிறது? இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார். உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிறைக்கு செல்லவும் தயார்
மேலும், மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் தானே? தமிழக அரசு நிதி கேட்டால் கொடுக்க மறுக்கிறீர்கள். தமிழக அரசு கொடுக்கும் வரி பணத்தில் எங்கள் பங்களிப்பை தாருங்கள் என்றால் மறுக்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமையை, மாநிலத்திற்கான சுயாட்சியை பேசுங்கள் என்றால் மத்திய அரசு பேச மறுக்கிறார்கள். ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போது வீட்டுக்கு அனுப்பினால் வீட்டுக்கு செல்வோம், சிறைக்கு அனுப்பினால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, '' சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் சிபிஐ, வருமானவரித்துறை என சோதனைகள் செய்கிறார்கள். ஆனால், அதானி மீது இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர் விவகாரம்
அம்பேத்கரை பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் பாஜகவினர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். ஆனால், மாநிலங்களவையில் அம்பேத்கரை பற்றி பேசினால் அவர்களுக்கு பிடிக்கவில்லை, இதுதான் பாசிச பாஜக. அதனால்தான் மாநிலங்களவையில் அமித்ஷா, ''அம்பேத்கர் அம்பேத்கர் என ஏன் கூறுகிறீர்கள்'' என கேள்வி எழுப்பியுள்ளார்'' என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.