சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 5ஆம் தேதி மாலை, 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரம்பூர், செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜான் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கக் கோரி அவரது மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.