சென்னை:மத்திய அரசின் மக்கள் மருத்தகங்கள், தனியார் மருத்தகங்களை விடவும் தமிழ்நாடு அரசின் முதல்வர் மருந்தகங்களில் 75 சதவிகிதம் விலை குறைவாக மருந்துகள் கிடைக்கும். இதனால், மக்களுக்கான மருத்துவ செலவு கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தில் அறிவிப்பு:முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தினந்தோறும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளதால் மக்களுக்கான மருத்துவச் செலவுகள் அதிகரிக்கின்றன.
சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வர் மருந்தகத்தில் விற்பனையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (TN GOVT DIPR) இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும்,"என்று அறிவித்தார்.
இதையும் படிங்க:”ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் நிலைத்திருக்கும்”... ரஜினிகாந்த் புகழாரம்
அதன் அடிப்படையில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னையில் திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தின் மூலம் முதல்வர் மருந்தகம் செயல்படுகிறது. ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பாக திருவல்லிக்கேணி விநாயகபுரத்தில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகம் எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் கண்டறிந்தோம்.
வேதிப்பொருள்கள் ஒன்றுதான்:நம்மிடம் பேசிய மருந்தகத்தின் விற்பனையாளர் பிரீத்தி, "முதல்வர் மருதகத்தில் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்கும்.ஜென்ரிக், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ், மத்திய அரசின் டாம்ப்கால், இம்காப்ஸ் மருந்துகளும் கிடைக்கும். பிராண்ட் மருந்துகளுக்கும் ஜென்ரிக் மருந்துக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது. இரண்டு மருந்துகளும் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் ஒன்றாகத் தான் இருக்கும்.
பிராண்டட் மருந்துகளில் கூடுதலாக வேதிப்பொருட்களை சுவைக் கூட்டும் வகையில் சேர்த்து இருப்பார்கள். பிராண்டட் மாத்திரைகளை தயார் செய்யும் நிறுவனம் 20 ஆண்டிற்கு காப்புரிமை பெற்றிருக்கும். இதனால் அந்த மருந்து தயாரிக்கும் முறையை பிற நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது. பிராண்டட் மருந்துகளைப் போலவே வேதிப்பொருள் தொடர்புடைய ஜென்ரிக் மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் நோயாளிகள் குணம் பெறலாம்.
மேலும் தனியார் மருதகங்கள், மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் ஆகியவற்றை விடவும் முதல்வர் மருந்தகத்தில் விலை குறைவாக மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஜென்ரிக் மருந்துகள் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும். அனைத்து வகையான மாத்திரைகள், மருந்துகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மக்களுக்கான மருத்துவச் செலவுகள் குறையும்,"என்றார்.