தஞ்சாவூரில் முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு தஞ்சாவூர்:2024நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, பிரச்சார தேதி அறிவிப்பு என விறுவிறுப்பாக நாடாளுமன்ற தேர்தல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தந்த கட்சி சார்பில், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்த அளவில், இம்முறை 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கி உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து, மாலை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க:அமைச்சருக்கு வந்த போன் கால்.. பதட்டமான தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார்! - Tenkasi Candidate Rani Sri Kumar
இந்த நிலையில், தற்போது தஞ்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கிவிட்டார். அந்த வகையில், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதியில் வணிகர்கள், பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பில் தஞ்சை திமுக எம்.பி வேட்பாளர் முரசொலி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"செய்வதெல்லாம் செய்துவிட்டு பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" - திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை! - Lok Sabha Election 2024