மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில், மாவட்ட பாஜக தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, விக்னேஷ், வினோத், ஶ்ரீநிவாஸ் மற்றும் மும்பையில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் கைது செய்யப்பட்டு மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், அகோரம் திருச்சி மத்தியச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கடந்த 7 ஆம் தேதி திருச்சி மத்தியச் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் ஜாமீனில் வெளி வருவதற்கு முன்னதாகவே, கைது செய்யப்பட்ட வினோத், விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் எஸ்.பாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர் சி. செந்திலரசன் மற்றும் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"சாராய விற்பனைக்கு அதிகாரிகள் துணைபோனதற்கான ஆதாரங்கள் உள்ளன" - ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் கூறுவது என்ன? - Kallakurichi Illicit Liquor Case