யார் அந்த சார்? திமுக எம்எல்ஏக்களின் பதாகைகளால் அதிர்ந்த சட்டப்பேரவை! - ANNA UNIV WHO IS SIR
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் யார் அந்த சார் கேள்விக்கு, பதில் அளிக்கும் விதமாக தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்திற்குள் பதாகைகள் ஏந்தி வந்தனர்.
பதாகைகளுடன் திமுக உறுப்பினர்கள் (ETV Bharat Tamil Nadu)
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, ஜனவரி 8 சட்டப்பேரவையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது எதிர்கட்சியினர், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் யார் அந்த சார்? என்பதை அரசு உடனடியாக கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல் அலுவலர் அப்படி யாருக்கும் இதில் தொடர்பில்லை என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவையின் ஐந்தாம் நாள் கூட்டத்திற்காக வந்திருந்த தி.மு.க உறுப்பினர்கள், யார் அந்த சார்? என்ற கேள்விக்கு எதிராக, இவர் தான் அந்த சார்? என்று குறிப்பிடப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நகர் சிறுமி வழக்கில் தொடர்புடையதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் முன்னாள் தென் சென்னை 103-ஆவது வடக்கு வட்ட செயலாளர் ப.சுதாகர் ஆகியோரின் படம், தி.மு.க உறுப்பினர்கள் வைத்திருந்த பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்தது.
திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த பதாகை (ETV Bharat Tamil Nadu)
சட்டப்பேரவை கூடிய மூன்றாம் நாளான ஜனவரி 8 கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார், "அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக சந்தேகம் எழும்புகிறது," என்று பேசியிருந்தார்.
அண்ணா நகர் சிறுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுதாகரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 8 அன்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், "கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.