சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கவுடன் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இதனடிப்படையில் பா.ஜ.க, த.மா.கா கூட்டணி என்பது உறுதி செய்யபட்டது.
மேலும், பாஜக சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட ஏழு பேர் கொண்ட தேர்தல் குழு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில், பாஜகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை இடமும் கொடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.