சென்னை : வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர்.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் (ETV Bharat Tamilnadu) தற்போது மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
தாம்பரம் மக்களின் துயர்
குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சியின் 63வது வார்டிற்குட்பட்ட வேடக்கண்ணப்பன் தெரு, அசோக் நகர் வடக்கு தெரு, மோதிலால் நகர் பாரதியார் தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளோ அல்லது வார்டு கவுன்சிலர்களோ அப்புறப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகுதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கனேஷ் என்பவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 63வது வார்டு மோதிலால் நகரில் கடந்த ஃபெஞ்சல் புயலில் இருந்து தற்போது பெய்த மழை வரை தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளோம்.
காய்ச்சல் பயம்
மேலும், மழைநீரில் கழிவு நீரும் கலந்துள்ளதால், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பலருக்கும் Viral Fever ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் டேங்கில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால், மக்கள் குடிநீர் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் (ETV Bharat Tamilnadu) எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டு கவுன்சிலர்கள் தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார்கள். மக்கள் பாதிப்படையும் போது யாரும் வந்து பார்ப்பதில்லை," என தெரிவித்தார்.
இதையும் படிங்க :மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: "சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி" - மேலூர் பகுதி மக்கள் நெகிழ்ச்சி!
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மணிமேகலை கூறுகையில், "ஏற்கனவே பெய்த மழையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தற்போது பெய்த மழையில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மழைநீரில் கால்வாய் நீரும் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
நடவடிக்கை எப்போது?
எங்களால் வீட்டை விட்டு வெளியே வந்து குடிநீரை கூட எடுத்து வர முடியவில்லை. இங்கு பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு கூட குழந்தைகள் செல்ல முடியவில்லை. எங்கள் பகுதிக்கு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் யாருமே இதை வந்து பார்க்கவில்லை. வீட்டில் நிம்மதியாக உணவு கூட சாப்பிட முடியவில்லை. துர்நாற்றம் வீசுவதால் அவதிக்கு உள்ளாகியுள்ளோம்," என தெரிவித்தார்.
தாம்பரம் 63வது வார்டு மக்கள் பேட்டி (ETV Bharat Tamilnadu) பாரதியார் நகரை சேர்ந்த ராஜா கூறுகையில், "வருடா, வருடம் எங்கள் பகுதிக்கு இதே பிரச்சனை ஏற்படுகிறது. தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கு வீட்டிற்குள் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வந்து விட்டது. இதனால் வீட்டில் இருக்க முடியாமல் தண்ணீர் தேங்காத இடத்திற்கு குடும்பத்தினருடன் வாடகை வீட்டிற்கு வந்துள்ளோம்.
கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் இங்கே உள்ளது. முறையாக கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூட இந்த பகுதிக்கு வந்து பார்க்கவில்லை," என தெரிவித்தார்.