சென்னை: தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயற்சித்த போது குன்றத்தூரைச் சேர்ந்த முகமது வாலித், புதுப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ரெவெட்லின் சானு ஆகியோரின் செல்போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், இது குறித்து மூன்று பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த மூன்று நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ், தாஸ் கிருஷ்ணா மற்றும் அகயா என்பது தெரியவந்தது. மேலும், ஒடிசாவில் இருந்து ஒரு கும்பலாக வந்து, தாம்பரத்தில் உள்ள முடிச்சூர், நேதாஜி நகர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக வீடு எடுத்து தங்கி, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயற்சிக்கும் பயணிகளிடம் கூட்ட நெரிசலை உருவாக்கி, அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்களைப் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க:பட்டியல் போட்டு மாங்காடு வீடுகளில் கைவரிசை காட்டி வந்த மூதாட்டி..போலீசில் சிக்கியது எப்படி?
இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்குள்ள குப்பைத் தொட்டியில் 15 செல்போன்கள் உட்பட மொத்தம் 17 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.