மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதி, பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள் பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கோயிலில் அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பெளர்ணமிதோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து மணமக்களை வாழ்த்திய உறவினர்கள் (ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், சித்தர் பீடத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த இ மிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி, இன்று (ஜனவரி 9) வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக, இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது முறைப்படி தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருவரும் விரும்பியுள்ளனர்.
மாலை மாற்றிக்கொண்ட தைவான் தம்பதியர் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி: திருப்பூரில் 1 லட்சம் லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்!
அதன்படி, தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தமிழர் பாரம்பரிய முறைப்படி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுபடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பாத பூஜை செய்துக்கொண்ட தைவான் தம்பதியர் (ETV Bharat Tamil Nadu) தைவான் நாட்டைச் சேர்ந்திருந்தாலும், தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொள்ள நினைத்த வெளிநாட்டினர் திருமணத்தில், சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது தைவான் நாட்டு தம்பதியின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.