தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தல தோனி, தல அஜித் இருவருமே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன்" - கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு! - natarajan ABOUT DHONI AND AJITH

T Natarajan: எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு யாராவது உதவி செய்தால் அந்த உதவிக்கான மதிப்பை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும், உதாசீனப்படுத்தக் கூடாது எனவும் தோனி, அஜித் இருவருமே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன் என பாராட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசினார்.

நடராஜன் புகைப்படம்
நடராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 4:25 PM IST

சேலம்:சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் உடன் கல்லூரி மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பாராட்டு விழா நிகழ்ச்சியில் நடராஜன் பேசுகையில், “நான் ஒரு சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவன். சொந்த வீடு கிடையாது. குறுகிய அளவிலான வீடுதான். மண் தரையில் படுத்து உறங்கி என் வாழ்நாளை கடந்து வந்தேன். இதற்கிடையில் கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக கற்று வந்தேன். ஒரு இலக்கை நோக்கிப் போகும் மாணவர்களான நீங்கள் பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.

சிலர் நமக்கு அறிவுரை கூறினாலே அதை பின்பற்றுவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த அறிவுரையை முன்னுதாரணமாக எடுத்து வாழ்க்கையில் பயணித்தால் நமக்கான நல்ல இடம் கிடைக்கும். அப்படி எனக்கு உறுதுணையாக இருந்தது என் அண்ணன் தான். எப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டாலும் அண்ணனின் அறிவுரை கேட்ட பிறகு தான் விளையாட்டில் ஈடுபடுவேன்.

என்னுடைய சொந்த கிராமத்தில், சொந்த செலவில் கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்தி எனது கிராமத்தைச் சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற வேண்டுமென்று நல்ல எண்ணத்தில் இந்த விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

எதிர்காலத்தில் நீங்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் உங்களால் சில பேர் வாழ்ந்தார்கள் என்றால், அது வாழ்நாள் முழுவதும் உங்களுடைய தலைமுறைக்கு கேட்கும். இன்னும் என் கிராமத்தைச் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எங்கு கிரிக்கெட் விளையாடச் சென்றாலும் என்னுடைய சொந்த செலவில் அவர்களை அனுப்பி வைப்பேன். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் செய்கிறேன்.

அப்படி எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு யாராவது உதவி செய்தால், அந்த உதவிக்கான மதிப்பை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும், உதாசீனப்படுத்தக் கூடாது. முன்பெல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சூழ்நிலை மாறி, தற்போது எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான கடின உழைப்பு உங்களிடம் தான் உள்ளது. எந்தத் துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அந்த துறையின் மீது அன்பு செலுத்த வேண்டும்.

அதேபோல நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையின் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களோ, எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்களோ அந்த துறையில் கடின உழைப்பு எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கான பயன் கண்டிப்பாக கிடைக்கும், அதற்கு உதாரணமே நான் தான்.

எனது வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் 15 ஆண்டுகளாக ரேஷன் அரிசி சாப்பிட்டு, இந்த கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்தேன். அதேபோல எனது அம்மா சமைக்கும் உணவு தான் எனக்கு ஹெல்த்தி என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டேன். உங்களுடைய கனவு குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தால், அதற்கான பலன் சிலருக்கு உடனே கிடைக்கும், சிலருக்கு தாமதமாக கிடைக்கும். இதெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கடின உழைப்பு இருந்தால் மட்டும்தான் அனைத்தும் நமக்கு கிடைக்கும். இந்த மாணவர் பருவத்தில் உங்களது உழைப்பு உண்மையாக இருந்தால் மட்டும் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

வாழ்க்கையில் நீங்கள் உயரச் செல்ல நினைக்கும் பொழுது பல தடைகள் வரும். அதைத் தாண்டி வர வேண்டும். அப்பொழுதுதான் நல்ல இடத்திற்கு வர முடியும். வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றாலும் நீங்கள் கடந்து வந்த பாதையை மறக்காதீர்கள். உங்களுக்காக உழைக்கும் பெற்றோரை மதித்து வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டும்.

தொடர்ந்து மாணவ மாணவியர் அவருடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது நடராஜன் தோனி, அஜித் இருவருமே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன், அவர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்" என்று கூறினார்.

இதையும் படிங்க:அஸ்வின் அணிக்கு ஷாக் அளித்த சேலம் ஸ்பார்டன்ஸ்..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! - TNPL 2024

ABOUT THE AUTHOR

...view details