புதுடெல்லி:சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவர் என டி.எம்.கிருஷ்ணா தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொள்ளக்கூடாது" என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்க, இந்து குழுமத்தின் உதவியுடன் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி விருதுடன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை மியூசிக் அகாடமி தேர்வு செய்தது. அவருக்கு இந்து குழுமத்தின் உதவியுடன் மறைந்த இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பரிசு வழங்கக்கூடாது என எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்தார். எனினும், மியூசிக் அகாடமி, இந்து குழுமம் ஆகியவை அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதயைடுத்து ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அளித்த உத்தரவில், ‘‘கர்நாடக இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சார்பில் சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கும், இந்து குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கவும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் ரூ.1 லட்சம் பரிசு தொகையை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி, இந்து குழுமம் ஆகியவற்றின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்து குழுமம் சார்பில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சம் பரிசு வழங்க தடையில்லை என்று கூறினர். தனிநீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர்.