Former DGP Sylendra Babu Press Meet கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், மணியகாரன்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிஎம்எஸ் வித்யா மந்திர் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இந்த மினி மாரத்தான் போட்டியானது 2 கி.மீட்டர், 5 கி.மீட்டர், 10 கி.மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, "இந்த மினி மாரத்தான் போட்டியானது 5, 10 ஆகிய கி.மீ தூரத்திற்கு நடைபெறுகிறது. போதைபொருட்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக இந்த மாரத்தான் நடைபெறுகிறது.
ஏற்கனவே, தமிழ்நாடு காவல்துறை சார்பாக போதை பொருட்களைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 'கஞ்சா வேட்டை' என்ற ஆப்ரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.
இதேபோன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இதற்காக கோவையில் இது மாதிரியான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்துவது அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படும். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களைத் தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
மேலும், இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது. குழந்தைகள் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறை 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். அதற்கு இது மாதிரியான ஓட்டப் போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எனக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்து இருப்பார்" - சீமான்