தருமபுரி:ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் அணை கட்டுவது குறித்து, தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தென்னிந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, கர்நாடக மாநில மூத்த விவசாயிகள் சங்கத் தலைவா் சாந்தகுமார் ஆகியோர் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவினர் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், நேற்று இக்குழுவினா் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு பகுதியில் காவிரி நீர் அளவிடும் பகுதி மற்றும் ராசி மணல் அணைக் கட்டும் இடத்திற்குச் சென்று, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அணை கட்டுவதற்காக அளவீடு செய்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளா் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாடு, கர்நாடக விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாநாகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது.
சுமார் 22 லட்சம் ஏக்கர் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. மேட்டூர் அணையில் 93 டிஎம்சி தண்ணீர் நிரம்பியதும், மீதமுள்ள உபரி நீர் கடலுக்குச் செல்வதை தடுக்க ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில், தமிழக எல்லையில் தான் அணை கட்ட வாய்ப்புள்ளது. கர்நாடகத்திலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், மேட்டூர் அணை நிரம்பியதும் கடலுக்கு வீணாகச் சென்று கலப்பதை தடுக்க தமிழகத்தில் கூடுதல் அணை கட்டப்பட வேண்டும்.
இதற்கு ராசிமணல் சிறந்த இடம். ராசிமணலில் அணை கட்டினால் 63 டிஎம்சி வரை தண்ணீரைச் சேமிக்க முடியும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு பாசன நீரை கூடுதலாக விடுவிக்க முடியும் என்று கா்நாடக அரசு கூறுகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டினால் பாசனத்துக்கு திறந்துவிடப்படும் உபரிநீரும் கிடைக்காமல் போய்விடும்.