சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றுவந்த மாணவர்களுக்கு கடந்த மாத (ஏப்ரல்) இறுதியில் முழு ஆண்டு தேர்வு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO), மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் (DEO) சுற்றறிக்கை ஒன்றை இன்று அனுப்பி உள்ளனர்.
அதில், "அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு கோடை விடுமுறை அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.