தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு நடந்த கொடூரம்.. விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்.. பின்னணி என்ன? - Trichy NIT Students Protest - TRICHY NIT STUDENTS PROTEST

Student harassment in Trichy NIT Hostel: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி விடிய விடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி என்ஐடி மாணவர்கள் போராட்டம்
திருச்சி என்ஐடி மாணவர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 11:06 AM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி அருகே மத்திய அரசின் தேசிய தொழில் நுட்பக் கல்லூரி (NIT) செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியைப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் என்ஐடி மாணவிகள் விடுதியில் இன்டர்நெட் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர் ஒருவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, பழுது சரிசெய்ய வந்த ஒப்பந்த ஊழியர் விடுதி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இந்த சம்பவம் குறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார். மாணவி எழுப்பிய சத்தத்தால் அப்பகுதியில் சக மாணவிகள் திரண்டுள்ளனர்.

பின்னர், இதுகுறித்து விடுதி வார்டனிம் புகார் அளித்த போது, வார்டன் மாணவிகள் ஆடைகள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை கைது செய்யக் கோரியும், அலட்சியமாகப் பதிலளித்து, தரக்குறைவாகப் பேசிய விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதல் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விடுதி நிர்வாகத்தின் அலச்சியப் போக்கைக் கண்டித்து என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு, எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் மகளிர் போலீசார் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்த ஊழியர் கதிரேசனை கைது செய்து, திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தாலும், புகார் அளித்த போது கண்டுகொள்ளாமல் விடுதி வார்டன் மாணவிகள் மீதே குற்றம் சாட்டியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் எனவும், மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்து நேற்று இரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி கோபால் மற்றும் முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் என்ஐடி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், NIT மாணவ மாணவிகள் பெண் காப்பாளர்களை மாற்ற வேண்டும், இதுபோன்று வெளியில் இருந்து பணிக்கு வருபவர்கள் விடுதிக்குள் வரும் பொழுது ஒருவர் உடனிருக்க வேண்டும், மாணவிகள் தனியாக அறையில் இருக்கும் பொழுது இதுபோன்ற அத்துமீறல்கள் இனி நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் என்ஐடி நிர்வாகமே பொறுப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர், என்‌ஐடி கல்லூரி வளாகம் முன்புள்ள திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்வதற்காகக் கல்லூரி மாணவ மாணவிகள் அணி திரண்டு செல்ல முற்பட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் மற்றும் என்ஐடி செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தியதுடன், கல்லூரி முகப்பு கதவை இழுத்து மூடியதால் வளாகத்தின் உள்ளேயே மாணவ மாணவிகள் அமர்ந்து "நீதி வேண்டும் நீதி வேண்டும்" என கோஷம் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று காலையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ்பி வருண்குமார் ஆகியோர் என்ஐடி கல்லூரி பெண் வார்டன் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தற்போது, விடுதி வார்டன் தரக்குறைவாகப் பேசியதற்கு மாணவிகளிடம் மன்னிப்பு கோரியதால், மாணவர்கள் நேற்று இரவு முதல் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: கேரளா பாணியில் தமிழ் சினிமாவிலும் கமிட்டி - நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details