மயிலாடுதுறை புத்தகத் திருவிழா மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழா, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் சார்பில், வருகின்ற 12ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தினந்தோறும் வருகை புரிந்து வருகின்றனர்.
அந்த வகையில், சீர்காழி அருகே அரசூர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் எண்ணத்தில், அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும், சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், அவரது சொந்த செலவில் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
புத்தகக் கண்காட்சியில் உள்ள புத்தக அரங்குகள், அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு களித்தனர். அதனைத் தொடர்ந்து, கண்காட்சியில் மாணவர்கள் கேட்ட அனைத்து நூல்களையும் வட்டாட்சியர் இளங்கோவன் வாங்கி, கொடுத்துள்ளார். இதனையடுத்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மாணவர்களை புத்தகங்களை வாசிக்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் வாங்கி கொடுத்தார். இதற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் காவலரை தாக்கிய வழக்கில் திமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்