சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 489 இடங்களுக்கு 3 ஆயிரத்து 783 மாணவர்களும், பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் உள்ள 56 ஆயிரத்து 928 இடங்களுக்கு 11 ஆயிரத்து 769 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
துணைக்கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலில் 199 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை மாணவி பவித்ரா பெற்றுள்ளார். பிஇ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்விற்கு 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதில் பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு 12 ஆயிரத்து 313 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 11 ஆயிரத்து 769 மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களுக்காக 56 ஆயிரத்து 928 இடங்கள் காலியாக உள்ளது. பொதுப்பிரிவில் கலையியல் பிரிவில் 199 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று மாணவி பவித்ரா முதலிடம் பெற்றுள்ளார். தொழிற்கல்விப்பிரிவில் 178.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாணவர் அனிஷ் முதலிடம் பெற்றுள்ளார்.