ஈரோடு: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்துள்ள அனுமன்பள்ளி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "மதுக்கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெற ஏற்பாடு செய்யப்பட்டு ஒருசில மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பார்களும் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், உரிமம் பெறாமல் பார்கள் இயங்குவது குறித்துக் கண்டறியப்பட்டால் அதனை நடத்துபவர் மீது மட்டுமின்றி அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்குச் சமீபத்தில் உயர்த்தப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜவுளிக் கடைகள் போராட்டம் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேலும், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற போதிலும், ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மட்டுமே திட்டம் துவங்கப்படாமல் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!