ஈரோடு:தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மாவட்டம் வாரியாக தூய்மைப் பணியாளர் நலன் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியில் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேசிய தலைவர் வெங்கடேசன் ஆய்வு நடத்தி, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தூய்மைப் பணியாளர் சங்கங்கள் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், ஈரோடு மாவட்டத்தில் நகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் ஊதியம் குறைவாக உள்ளதாக வைத்துள்ள புகாருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல் செய்யபட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு இரண்டு கோரிக்கைகள் முன் வைப்பதாகவும், அதில் தமிழகத்தில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும். இந்தியாவில் 11 மாநிலத்தில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர் நலன் கருதி தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் மனித மலக்கழிவு குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போது மனித உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. 1993-2024ஆம் ஆண்டு வரை 257 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வியறிவு முன்னேற்றம் அடைந்த போதிலும், மலக்கழிவு குழியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது.