சென்னை:திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பல ஆண்டுகள் கழித்து பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபுர பணிகளுக்காக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ பாதம் தாங்கி சங்கத்தினர் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கருட சேவை நிகழ்ச்சியில் வீதி உலாவின்போது உற்சவரை பல்லக்கில் வைத்து தூக்கி வரும் போது, கொல்லத்தின் தண்டு உடைந்து சாமி சிலை கீழே விழுந்தது. இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தண்டு உடைந்த சம்பவம் குறித்து இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் முல்லை தலைமையில், கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய வந்தனர். இந்த ஆய்வின் போது, ஸ்ரீ பாதம் தாங்கிகளை இணை ஆணையர் தரக்குறைவாக பேசி கோயிலிருந்து வெளியேறச் சொன்னதாக ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கத்தின் நிர்வாகி தாமோதரன், “கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு எட்டு மாத காலத்திற்கு முன்பாகவே தண்டு பிரச்னை குறித்து நாங்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஏனென்றால், தண்டு கடந்த 25 வருடத்திற்கு முன்பாக கோயிலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில வருடமாக, தண்டை பராமரிக்கவில்லை.
ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கங்கள் சார்பாக அரசிடம் தண்டினை பராமரிக்க கோரிக்கை வைத்தும், அவர்கள் அதை சரி செய்யவில்லை. இந்நிலையில், கருட சேவையின் போது தண்டு முறிந்து பெருமாள் கீழே விழுந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக கோயிலுக்கு வந்தனர். அந்த ஆய்வின் போது, ஸ்ரீ பாதம் தாங்கிகள் சார்பாக சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைக்கிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
மேலும், நாங்கள் பொருட்படுத்தாமல் அதிகாரிகளிடம் வாகனங்கள் சரியாக இல்லை, இதுவரை அரசாங்கத்தால் எந்த வாகனமும், சரி செய்யவில்லை. எல்லாமே டோனர்ஸ் மற்றும் உபயதரர்கள் மூலமாகவும் தான் சரி செய்து வருகிறோம். எனவே, நீங்கள் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு அதிகாரிகள் இது அரசாங்கத்தின் வேலை, நீங்கள் கேட்கக்கூடாது என்றும், ஸ்ரீ பாதம் தாங்கிகள் சங்கத்தினரை தரக்குறைவாக பேசினார்” என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க:குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்! - Gentle PARENTING TIPS