இலங்கை ஜெய சரவணன் செய்தியாளர் சந்திப்பு (credits - ETV Bharat Tamil Nadu) சென்னை:தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இயக்கத்தின் துணைத் தலைவர் ஜெய சரவணன் என்பவர், இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திடீர் குற்றச்சாட்டை வைப்பதற்கான காரணம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், “சீமான் இளைஞர்களிடையே வன்மத்தை விதைத்து வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள், எனவே இந்த பாதிப்பு அடுத்த தலைமுறைக்கும் வேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம். இலங்கை வடகிழக்கு 30 வருடங்கள் பின் தங்கப்பட்டுள்ளது. அந்த நிலை தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கும் வேண்டாம். சீமான் உணர்ச்சிப்பூர்வமான அரசியலில் ஈடுபடுகிறார். அறிவுப்பூர்வமான அரசியலை செய்ய வேண்டும்.
கோபத்தை ஏற்படுத்தி போர் குணத்துடன் அரசியல் செய்து வருகிறார். போர் வேண்டாம் என்பதற்காக நாங்கள் பேசி வருகிறோம். போரை நாங்கள் நேரடியாகச் சந்தித்தோம். ஆதரவு கொடுப்பவர்கள் களச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாடும் எங்களுக்கு நண்பர்கள் இல்லை. எங்களது தாய் இந்தியா. இவற்றை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம்.
தற்போது இந்திய அரசு, இலங்கையில் தமிழர்கள் இருக்கும் பகுதியில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் நடக்கும் பிரச்னையை முழுமையாக இந்திய அரசு கவனிக்கவில்லை. இலங்கை இறுதிப் போரின்போது இந்தியா நினைத்து இருந்தால் தடுத்திருக்கலாம். தமிழக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். தற்போது இலங்கை அரசியல் சூழ்நிலையில், இலங்கை பொருளாதாரம் அதிகரிக்க யார் உதவியாக இருப்பார்களோ, அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.
கச்சத்தீவு விவகாரத்தை இரண்டு அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது அமைப்பு பேசினால் தீர்வு காண முடியாது. துவாரகா பெயரில் வெளியான வீடியோ உண்மையில்லை. சீமான் பேசி வரும் கருத்துக்கள் தொடர்பாக அவரைச் சந்தித்து வலியுறுத்துவோம். சிங்களமைப்பு சீமானுக்கு எதிராக உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் சீமான் பணம் பெறுவது உண்மை” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:"சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது" - அமைச்சர் ரகுபதி பேட்டி! - Savukku Shankar Case