சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலானது மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். திமுக, அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்பதால், ஐந்து முனை போட்டியாக அமைய வாய்ப்பு இருக்கின்றது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் பணியினை முதன்முதலில் தொடங்கி உள்ளது. அதன்படி, 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதி பார்வையாளர்கள் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தொகுதி பார்வையாளர்கள் நியமனம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளனர். அதேபோல் திமுகவும் தொடர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் யார் என்பதற்கான அடையாளம் காணும் பணியும் துவங்கியுள்ளது.
தனித்து நிற்கும் ஆசை வந்துவிட்டதா?: சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடம், ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் பேச துவங்கி விட்டது. ஒருவேளை கூட்டணிக் கட்சிகள் ஏதேனும் பிரச்னை செய்தால் தனியாக கூட நிற்க தயராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவில்லை என்றாலும் கூட, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் பணியை 6 மாதம் முன்னர் தான் துவங்குவார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 வெற்றி பெற்ற கொண்டாட்டத்திலேயே அடுத்த கட்ட நகர்வுக்கு வந்துவிட்டார்கள்.
தோல்விக்கு காரணம் இபிஎஸ்?: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அனைவரும் கூறினாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை, எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை பிடிவாதமாக இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய தோல்வி தான் ஏற்படும்.
திமுக ஆளும் கட்சியாக இருக்கிறார்கள் கூட்டணியும் பலமாக உள்ளது. ஒரு வேளை கூட்டணி இல்லை என்றாலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள். திமுகவிற்கு சமமாக களம் காணும் வகையில் அதிமுக இல்லை. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை 10 - 15 % வாக்குகள் பெறலாமே தவிர, வெற்றி பெறுவதற்கான 35 - 40 % வாக்குகள் வாங்கும் வாய்ப்பு இல்லை.
திமுக கூட்டணியுடன் நின்றால் கூட்டணி வாக்குகள், திமுக வாக்குகள் ஒன்றாக ஒருங்கிணைந்து வந்துவிடும் என்பதாலும், திமுக எதிரான வாக்குகள் பல பிரிவுகளாக அதிமுக, பாஜக, நாதக, தவெக என சென்றுவிடும் என்பதாலும் திமுக எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
இதையும் படிங்க :2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போவே வேட்பாளரை அறிவித்த கட்சி.. ஆனா திமுகவுடன் கூட்டணி கிடையாதாம்!