திருநெல்வேலி:தென்தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்ற கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் முக்கிய கலையாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரைக்கு தெற்கே, கோயில் திருவிழாக்களில் வில்லிசைப் பாட்டு தலைசிறந்த பக்தி நிகழ்ச்சியாக இருக்கிறது. கடவுளைப் போற்றிப் பாடும் இந்த வில்லிசைப்பாட்டிற்கு மயங்காத சாமிகளே இல்லை என்று கூறலாம்.
ஆடாத சாமிகளையும் கூட ஆடவைக்கும் வில்லிசை கலைக்கு, கிராமங்களில் அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. கோயில் திருவிழா என்றாலே காப்பு கட்டுவதில் தொடங்கி பந்தல் போட்டு நையாண்டி மேளம் வில்லுப்பாட்டு என கிராமிய இசை முழங்க உற்சாகத்தோடு கொண்டாடப்படும். ஆனால், காலப்போக்கில் கோயில் திருவிழாக்களில் பாட்டு கச்சேரி, செண்டை மேளம் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசை நிகழ்ச்சிகளின் வரவால் கிராமியக் கலையான வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
அழிவின் பாதையில் வில்லுப்பாட்டு:புதிதாக வில்லுப்பாட்டு கலையை கற்றுக்கொள்ள பெரியளவில் யாரும் ஆர்வம் காட்டாததே இதற்கு முக்கிய காரணம் என சொல்லலாம். இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் வில்லிசைக்கு உயிர் கொடுக்கும் விதமாக தற்போது இளம் பெண்கள் இளைஞர்கள் வில்லுப்பாட்டு கலையை பாட தொடங்கியுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவி என்ற இளம்பெண் (19) தனது 14 வயதில் வில்லுப்பாட்டு மீது ஏற்பட்ட அதீத காதல் காரணமாக அதை முறையாக கற்று வில்லுப்பாட்டு கலையில் கோலோச்சி வருகிறார்.
இந்த நிலையில் மாதவியை தொடர்ந்து அதே தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கருவந்தா என்ற கிராமத்தை சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் வில்லுப்பாட்டு கலையில் அசத்தி வருகின்றனர். கருவந்தா பொதிகாச்சலம் உமா தம்பதிக்கு சத்யவள்ளி (18) மாரிச்செல்வி என்ற இரு மகள்களும், ஐயப்ப செல்வின் (22) என்ற மகனும் உள்ளனர். பொதிகாச்சலம் கடந்த 30 ஆண்டுகளாக வில்லுப்பாட்டு பாடி வரும் நிலையில் அவரது இளைய மகளான சத்யவள்ளி மற்றும் மகன் ஐயப்ப செல்வினை வில்லுப்பாட்டு பாட செல்லும்போது அடிக்கடி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
கைகொடுக்கும் இளம் தலைமுறை: இதனால் இருவருக்கும் சிறு வயதிலையே வில்லுப்பாட்டு மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 15 வயதில் வில்லுப்பாட வேண்டும் என சத்யவள்ளி தனது ஆசையை தந்தையிடம் கூற, படிப்பு பாதிக்கும் என்பதால் முதலில் அதற்கு தடை போட்ட பொதிகாச்சலம் பின்னாளில் தனது மகளின் ஆசைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதையடுத்து சத்யவள்ளி ஐயப்ப செல்வின் இருவரும் முதலில் வில்லுப்பாட்டில் பக்க வாத்தியங்களான தாளம் அடித்தல், பானை அடித்தல் போன்ற பணியில் ஈடுபட்டு தனது தந்தை அருகில் அமர்ந்து அவர் பாடுவதை ஆழமாக கவனித்துள்ளனர்.
ஐயப்ப செல்வின் குடம் அடித்தலில் ஆர்வம் ஏற்பட்டதால் அதை முறைப்படி கற்று தேர்ந்தார். ஆனால் சத்யவள்ளிக்கு வில்லுப்பாட்டு அன்னாவி ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்துள்ளது. வில்லுப்பாட்டில் முன்னணியில் பாடுபவர்களை தான் அன்னாவி என்பார்கள். அவருக்கு அருகில் அமர்ந்து பாடுபவர் பக்கப்பாட்டு கலைஞர் என்பர். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது 16 வயதில் சத்யவள்ளி பக்கப்பாட்டு கலைஞராக உருவெடுத்தார்.