திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே பரம்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயம் செய்து வரும் சிவசுப்பிரமணியன் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஊருக்கு அருகில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். இயற்கையை நேசிக்கும் இவருக்கு தான் கட்டபோகும் வீடும் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
வழக்கம் போல் சிமெண்ட், செங்கல், மணல், கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி வீடு கட்டினால் இயற்கையான சூழல் கிடைக்காது என எண்ணிய அவர், சிமெண்ட் வீட்டை புறக்கணித்து, சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரக்கட்டைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க திட்டமிட்டுள்ளார். அப்போது மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்தின் நினைவு வரவே, அவரிடம் தனது ஆசையை கூறியுள்ளார்.
மரத்தாலான வீடு:அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால், ஏதேனும் குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டியுள்ளார். அப்போது சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோமசுந்தரத்தை ஊக்கப்படுத்தியுள்ளார். அதன் பின்பு கடந்த 2021ஆம் ஆண்டு வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்களை சிமெண்ட் மணல் கலவையைக் கொண்டு கட்டியுள்ளனர்.
அடித்தளத்திற்கு மேல் பகுதியில் நான்கு புறத்திலும் சுவர்கள் மற்றும் சீலிங் முழுக்க முழுக்க மரக்கட்டைகளை கொண்டு கட்டத் தொடங்கினர். இதற்காக சிவசுப்பிரமணியன் பல இடங்களில் அலைந்து திரிந்து நேர்த்தியான தரமான மரக்கட்டைகளை தேர்வு செய்து வாங்கிள்ளார். மேலும் பல ஆண்டுகள் வாழப்போகும் வீடு என்பதால் உறுதிக்காக கனமான கட்டைகளை வாங்கியுள்ளார். செங்கலுக்கு இணையாக ஒவ்வொரு கட்டையும் 3 இன்ச் கொண்டதாக வாங்கியுள்ளார்.
பாதுகாப்பு வசதிகள்:அதேபோல் 7 அடி கொண்ட கட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். வீட்டின் சுவர்கள் அனைத்தும் வேம்பு கட்டையாலும், சீலிங் பகுதி முழுக்க தேக்கு கட்டையாலும் கட்டியுள்ளனர். மர சிற்பக் கலையில் கைத்தேர்ந்த கலைஞரான சோமசுந்தரம், தான் அமைக்கும் முதல் மரக்கட்டை வீடு என்பதால் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக வீட்டை கட்டியுள்ளார். மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில், போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் சமையலறை என சாதாரண வீடு போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரக்கட்டைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தியுள்ளனர். கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் சீலிங் பகுதிக்கு மேல் மண் ஓடும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலம் பாக்ஸ் (Column Box) எனப்படும் கான்கீரிட் தூண்கள் அமைக்கப்படுவது வழக்கம். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும் என்கிறார் சோமசுந்தரம்.
தீ தடுப்பு: வீட்டின் உறுதித்தன்மைக்காக நான்கு பக்கமும் அதிகபட்சம் 5 இஞ்ச் கனம் கொண்ட மரக்கட்டைகளால் தூண் அமைத்துள்ளார். மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு அலமாரியும் (Cup board) அமைத்துள்ளனர். சிலிண்டர் அடுப்பு பயன்படுத்துவதால் தீ பாதுகாப்பிற்காக சமையலறை மேடை மட்டும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வீடு:அது தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் மரக்கட்டைகள் கொண்டு வடிவமைத்துள்ளனர். மொத்தமாக 6 ஆயிரம் சதுர அடி அளவுக்கு மரக்கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். தற்போது வீட்டின் 90 சதவீத பணிகள் முடிவடைந்ததாகவும், இன்னும் பினிசிங் ஒர்க் மட்டும் பாக்கி உள்ளதாகவும், அதையும் விரைந்து முடித்து அடுத்த மாதம் கிரகப்பிரவேசம் செய்ய உள்ளதாக கூறுகிறார் சிவசுப்ரமணியன்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை சார்ந்த சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக இந்த மரக்கட்டை வீட்டை தேர்வு செய்தேன். முதலில் குடும்பத்தினர் தயங்கினார்கள். தற்போது வீடு மிக அழகாக வந்துள்ளது. எனவே எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். மரக்கட்டையால் கட்டப்பட்ட வீடு என்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. ஊர் மக்கள் முதலில் வேடிக்கையாக பார்த்தார்கள். ஆனால் தற்போது அவர்களே வியப்போடு பார்க்கிறார்கள்” என்றார்.