சென்னை:சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனிடையே, சென்னை காவல் ஆணையர் உட்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து, சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பதவி ஏற்றுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாக கூறப்பட்டது. அந்த வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐஜிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு, அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அந்த வகையில், ரவுடிகளின் மீதான வழக்கை கிடப்பில் போடாமல் தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அதை மீறியும் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டால் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகின.