தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை விடுவிக்க உத்தரவு! - AARUDHRA GOLD SCAM

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா போர்டு
நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா போர்டு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2025, 3:35 PM IST

சென்னை:சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு அதிக வட்டி தருவதாக மக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில், தமிழ்நாடு காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த வகையில், ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேஷுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆருத்ரா மோசடி விவகாரத்திற்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை எனத் தெரிவித்தார். மேலும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:"தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி பேசுவதா?" - ஆ.ராசாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் அறிவுரை!

பின்னர், வழக்கு நிலுவையில் இருப்பதால், வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்யக்கூடாது என பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம், 7 வங்கிக் கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷ்-க்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details