சென்னை:டிசம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் வருகிற டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும். கடந்த முறையே 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என முடிவு செய்தாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு எத்தனை நாட்கள் சட்டமன்றம் கூடியுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த அப்பாவு, "அனைத்து கட்சியினரையும் கொண்ட அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி தான் சட்டமன்ற கூட்டத்தொடரின் நாட்களை அறிவிக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் அறிவிக்க இயலாது" என்றார்.
"மேலும், உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களில் தேவையான இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் வந்த பிறகு தான் சட்டமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.