கோயம்புத்தூர்: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில், மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸை, கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஆதரவு கோரினார். உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரப்பட்டது. கோவை தொகுதியில் ராமச்சந்திரனின் வெற்றி பிரகாசமாக உள்ளது. கோவை மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களை அதிமுகதான் கொண்டு வந்தது.
திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில், மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவும், கோவை வேட்பாளர் அண்ணாமலையும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால், இதுவரை மக்களுக்காக அவர்கள் எதுவும் செய்யாததால், திமுக கொடுத்த வாக்குறுதி போல் தான், அண்ணாமலை கொடுத்த வாக்குறுதியும் இருக்கும்.
கோவையை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றதும், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்ததும் அதிமுக தான் என்பது மக்களுக்கு தெரியும். எனவே, ஐந்து தொகுதி அதிமுக வேட்பாளர்களின் வெற்றி, உறுதி செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். திமுகவினர் பணத்தை நம்பி நிற்கிறார்கள். அண்ணாமலை செய்தியாளர்களிடமும், சமூக வலைதளங்களிலும் தான் அரசியல் செய்கிறார். அவரது அரசியல் களத்தில் இல்லை.
அண்ணாமலை தற்பொழுது அதிமுகவை ஒழிப்போம், எடப்பாடியாரை ஒழிப்போம் என்று தான் பேசி வருகிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்துள்ளோம். அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அளித்து, மக்களோடும் மக்களாக இருக்கிறோம். 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை அதிமுக அளித்துள்ளது. ஆனால், திமுக 38 எம்பிக்களைக் கொண்டும் எதுவுமே செய்யவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி, தமிழ்நாட்டு உரிமையை மீட்டெடுத்தவர், எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமின்றி, இலங்கை தமிழர் பிரச்னை, இட ஒதுக்கீடு அனைத்தையும் மீட்டெடுத்தது அதிமுக தான். மற்றவர்கள் கூறுவதில் உண்மையில்லை. தமிழகத்தில் திமுக மீதான எதிர்ப்பலைகள் கடுமையாக இருக்கிறது. திமுக வேட்பாளர்கள் களத்திற்கு கூட செல்ல முடிவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், எடப்பாடியாரின் பேச்சில் உள்ள உண்மை தன்மையால், மக்கள் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதிமுக தொண்டர்கள் மோடியின் பக்கம் செல்வதாகவும், அதிமுக தலைவர்கள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறுகிறார். ஆனால், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு செல்வது அண்ணாமலைதான்.
மீடியாவிலும், ட்விட்டரிலும், பேஸ்புக்களில் மட்டும் மக்களை சந்தித்துக் கொண்டிருப்பது யார்? என எல்லோருக்கும் தெரியும். மேலும், களத்தில் கீழ்மட்ட மக்களிடமும், சாதாரண மக்களிடமும், ஏழை மக்களிடமும் திமுகவின் திட்டங்கள் இல்லை. ஜெயலலிதா மறைந்தால் கூட, முழுமையாக நாங்கள் மட்டும்தான் மக்களுக்காக இருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024