கோயம்புத்தூர்:நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில், கோயம்புத்தூரியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, "கோவை மக்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர் அவர்களது தீர்பை அதிமுக வரவேற்கிறது. அதிமுகவை பொருத்தவரையில் பல தேர்தல்களைக் கண்ட இயக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்ட போது பல்வேறு கட்சிகள் பாஜக உட்படக் கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக வங்கிய வாக்கு சதவீதம் 19.35 சதவீதம் தான். இன்றைக்கு தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணி வைத்து 20.46 விழுக்காடு வாக்குகளை வாங்கியுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம், ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசியுள்ளார். வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதனை விட்டு விட்டு 2-ஆம் கட்ட அதிமுக தலைவர்கள் அதிகமாக பேசினார்கள் என கூறுவது சரியல்ல" என காட்டமாக கூறினார்.