மதுரை:கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனிடையே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், தாம்பரத்திலிருந்து – கேரள மாநிலம் கொச்சுவேலிக்கும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து தாம்பரத்திற்கும் வாரம் இருமுறை கோடை கால ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கோடை கால தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலானது (06035), வரும் 16-ம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
அதேபோல், கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) வருகிற 17-ஆம் தேதியில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும், கொச்சுவேலியில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.