தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மதுரையில் இருந்து மெமு ரயில் சேவை.. எப்போது துவக்கம்? - MEMU TRAIN IN MADURAI

தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரையில் மெமு ரயில் சேவையைத் துவக்குவது குறித்து தெற்கு ரயில்வே பரீசீலனை செய்வதாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது.

மெமு ரயில்  MEMU Train  Southern Railway  மதுரையில் மெமு ரயில் சேவை
இணை அமைச்சரிடம் மனு அளிக்கும் காட்சி, ரயில் புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 7:45 AM IST

மதுரை:மதுரையில் இருந்து மெமு ரயில் சேவையைத் துவக்குவது குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார் என அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகிகள் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக தகவல் தெரிவித்துள்ளனர்.

மதுரையை மையமாகக் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தேனி, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வகையில், மெமு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என தென் மாவட்ட வணிகர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அகில பாரதிய கிரஹாக் பஞ்சாயத்து (ஏபிஜிபி) என்ற அமைப்பு மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தது. அந்த மனுவை, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவை டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: 70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை!

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அவ்வமைப்பின் தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் சத்தியபாலன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், "தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை திகழ்கிறது. அதுமட்டுமன்றி, வணிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் சரணாலயமாகவும் திகழ்கிறது.

மேலும், தென் மாவட்டங்களில் உள்ள பல ஊர்கள் மதுரை உட்பட ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களைக் கொண்டுள்ளதால் பக்தர்களுக்கும் மெமு சேவை பெரும் உதவியாக இருக்கும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், பழனி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து நாள்தோறும் வேலை, கல்வி நிமித்தமாக ஆயிரக்கணக்கானோர் மதுரைக்கு வருகின்றனர்.

இதுகுறித்து பலரிடமும் கருத்துக் கேட்டு, தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, மதுரையில் தனியாக மெமு ரயில் சேவையைத் துவக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் 160 கிமீ, தென்காசி 165 கிமீ, நெல்லை 157 கிமீ, தூத்துக்குடி 157 கிமீ, பொள்ளாச்சி 180 கிமீ, திருச்சி 157 கிமீ என அனைத்து ஊர்களும் 180 கிமீ தொலைவுக்குள்தான் உள்ளன.

அதாவது, மெமு ரயில்கள் 170 கிமீ தூரம் வரை இயக்கலாம் என்பதால், மதுரையை மையமாகக் கொண்டு மெமு ரயில் சேவை துவக்கப்படுவது சிறப்பாக இருக்கும். வெறும் 3 மணி நேரங்களில் மேற்கண்ட பயணங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட அனைத்து ஊர்களுக்கும் ரயில் போக்குவரத்திற்கான இருப்புப்பாதைகள் உள்ள காரணத்தால், மெமு ரயில் சேவையை மிக எளிதாக ரயில்வேயால் துவங்க முடியும்.

காலை, பிற்பகல், மாலை என இந்த ரயில் சேவைகளை இயக்குவதன் மூலம், பேருந்துகளை விட மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் விரைவான பயணத்தை மேற்கொள்ள முடியும். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தோம். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி டெல்லியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம் மனு அளித்தோம்.

எங்களது கோரிக்கைகளைக் கேட்டு இதுகுறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, ஆவண செய்ய முயற்சி செய்கிறேன் என உறுதியளித்துள்ளார். மெமு ரயில் சேவை தொடங்கப்பட்டால், தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களும் நல்ல வளர்ச்சியையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், வணிகர்களுக்கு வியாபாரமும் பெருக வாய்ப்புகள் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

மேலும், ஏபிஜிபி அமைப்பின் வல்லுநர் குழுவிலுள்ள ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் வழிகாட்டுதலின் அடிப்படையில், அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் பசுபதி, பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில தலைவர் வெங்கட்ராமன், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ஆகியோர் ரயில்வே இணை அமைச்சரைச் சந்தித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details