தூத்துக்குடி: கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரு வழியாக மைசூருக்கு தினசரி தூத்துக்குடியில் இருந்து ரயில் இயங்கி வருகிறது. வண்டி எண் 16235, தூத்துக்குடியில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.20-க்கு மைசூரைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 16236, மைசூரில் இருந்து தினமும் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது.
இந்த ரயிலானது சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக இயக்கப்படாமல், ஈரோடு வழியாக இயக்கப்படுவதால், தினமும் இந்த ரயிலின் இரு மார்க்கங்களிலும் இன்ஜினை கழற்றி எதிர் திசையில் மாற்ற வேண்டியுள்ளது. ஆனால், நாமக்கல் வழியாக இயக்குவதன் மூலம், அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரம் வரை மிச்சமாகும். அது மட்டுமன்றி, ரயில்வே ஊழியர்களின் பணிச் சுமையும் குறையும்.
தென்காசி-விருதுநகர் வழித்தட மக்கள், குருவாயூர்-மதுரை ரயில் மூலம் விருதுநகர் வரை வந்து, பின் தூத்துக்குடி- மைசூர் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும்போது, வண்டி எண் 16236 ஆனது, மதுரைக்கு காலை 07.25 மணிக்குதான் வந்தடைகிறது.
மேலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கே புறப்படுவதால், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி வழித்தட மக்களால் மதுரை-செங்கோட்டை ரயிலைப் பிடிக்க முடிவதில்லை. மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நாமக்கல் வழியாக இயக்கப்படும் பட்சத்தில், இந்த ரயில் மதுரைக்கு மிக எளிதாக காலை 6.25 மணிக்கு வந்தடையும்.