சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி இதுவரை ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும், மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக, இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இதையும் படிங்க :"விஜய் ஆரம்பித்த கட்சி 6 மாசம் தான் ஓடும்"- திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சினிமா பாணியில் விமர்சனம்! - minister anbarasan criticized tvk
இந்நிலையில் சமீபத்தில் தவெகவின் கட்சி கொடியை அறிமுகம் செய்தார். அடுத்த கட்ட நகர்வாக தவெக மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது.
ஆனால், மாநாடு நடத்த குறைந்த நாட்களே இருப்பதால் மாநாடு தள்ளி வைக்கலாம் என பேச்சுகள் எழுந்தது. அந்த வகையில், இன்றைய தினம் (செப்.12) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.