சென்னை:கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் டெல்லிக்கு விரைந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை அழுத்தத்தால் டெல்லி சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் சென்னை திரும்பும் பாஜக தேர்தல் குழு, பாஜக கூட்டணி கட்சிகளை இறுதி செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோரைக் கொண்ட பாஜக குழு நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) இரவு மீண்டும் சென்னைக்கு செல்லுமாறு பாஜக தேசிய தலைமை அவர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜக சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொலைபேசி மூலமாக கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
பாமகவுடன் கூட்டணிக்காக மேற்கொண்ட முயற்சிகள் நேற்று முழுமையுறாததால் அமைச்சர்கள் இருவரும் டெல்லி சென்ற நிலையில், உடனடியாக பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்து தருமாறு அண்ணாமலை கூறியதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர்.
அண்ணாமலை தேசிய தலைமைக்கு வழங்கியுள்ள தரவுகளின்படி, 'பாமகவிற்கு இந்த தேர்தலில் 5 முதல் 6 சதவீதம் வாக்குகளை எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் பாஜக கூட்டணிக்கு வந்தால், பாஜக கூட்டணியின் வாக்கு வாங்கி 18 முதல் 20 சதவீதமாக உயரும்' என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேவேளையில் பாமக, அதிமுக பக்கம் சென்றால் பாஜகவின் வாக்கு வங்கி குறைவது மட்டுமல்லாமல், ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் வரை அதிமுக கூட்டணி (AIADMK Alliance) வெற்றி பெறும் சூழல் உருவாகிவிடும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். அதிமுகவின் வெற்றியை முழுமையாக தடுக்கவும், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும் கணிசமான வாக்கு வங்கியை பாஜக நிரூபிக்கவும் தங்களது கூட்டணியில் பாமக இருப்பது அவசியம் என அண்ணாமலை டெல்லி மேலிட பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகிய இருவரும் மீண்டும் சென்னைக்கு வர உள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடந்ததைப் போல, இன்று இரவு பாமகவுடன் தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இன்று இரவு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என பாமக தரப்பில் கூறியுள்ள போதும், பாஜக - பாமக கூட்டணி குறித்த முக்கிய முடிவு நாளை வெளியாகக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங்ஆகியோரும் கூட்டணி கட்சிகளுடன் ஈடுபட்டதாக பேச்சுவார்த்தையில் தேனி, திருச்சி, சிவகங்கை, தென்சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகளை அமமுக கேட்டுள்ளதாகவும் ஆனால், பாஜக சார்பில் 4 இடங்களை அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:"குஷ்பு பேச்சுக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் பதிலளிப்பார்கள்" - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!