தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் களைகட்டும் கடலூர்.. பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியா? - சௌமியா அன்புமணி கடலூர் தொகுதி

Sowmiya Anbumani: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி டாக்டர் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட வாய்ப்பு
பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:56 PM IST

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அதிமுக தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக உடனான அதிமுக திரை மறைவு பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு எட்டப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பாமக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி தயாராக வைத்திருப்பதாகவும், ஏழு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் கடலூர், விழுப்புரம், தர்மபுரி, விருதுநகர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளைப் பெற பாமக முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி டாக்டர் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே கடலூரில் பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளை பாமக நடத்தி வருவதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம், வடலூர் பண்பாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு எனத் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளை பாமக நடத்தி வருகிறது.

மேலும் கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் வன்னியர் சமுதாய வாக்குகள் இருப்பதாலும், பாமக அமைப்பு ரீதியாக அங்குப் பலமாக இருப்பதாலும் டாக்டர் சௌமியா அன்புமணியை அங்கு போட்டியிட வைப்பதன் மூலமாக எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்பதால் அங்கு பாமக போட்டியிட வாய்ப்புள்ளது.

எனவே கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் சௌமியா அன்புமணி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை மாவட்ட பாமக நிர்வாகிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தர்மபுரியில் இந்த முறை டாக்டர் செந்தில் குமார் என்பவர் போட்டியிட உள்ளதாகவும், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ கே மூர்த்தியும், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அக்கட்சியின் பொருளாளர் திலக பாமாவும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு; முன்னாள் சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கு குறித்து போலீஸ் பதிலளிக்க உத்தரவு..

ABOUT THE AUTHOR

...view details