சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர்,வனவர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட போட்டித்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (ஜுலை 20) நிறைவடைந்தது.
தேர்வர்கள் கடைசி நேரத்தில் அதிகளவில் விண்ணப்பம் செய்ததால் ஏற்பட்ட சர்வர் பிரச்னையால், ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டு ஜூலை 20ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றது.
குரூப்2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14 ந் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 காலி பணியிடங்களும், குரூப் 2ஏ நிலையிலான பதவிகளின் மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில், குருப் 2 மற்றும் 2 ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக சுமார் 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வு: 2,768 இடங்களுக்கு எத்தனை பேர் போட்டி தெரியுமா?