சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.
குறிப்பாக, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவுடன் மதிமுக இடையே மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சுமூகமான முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில், மதிமுக நிர்வாகக் குழு அவசரக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
அதில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பட்சத்தில், பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பம்பரம் சின்னத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாகவும், சொந்த சின்னத்தில் நிற்பது உறுதி என மதிமுக அவசரக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மதிமுக கேட்கும் ஒரு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும், அதனால் திமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் மதிமுக அவசர குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மாநிலங்களவைப் பதவி முடிந்தவுடன், அந்த இடத்தை மீண்டும் அவருக்கே வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக தொகுதி பங்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்!