சிவகங்கை:பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன் மற்றும் சந்தோஷ் குமார் என 3 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் 2வது மகன் சரவணன் மற்றும் 3வது மகன் சந்தோஷ்குமார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது தாயார் முத்துக்காளியம்மாள் கஷ்டபட்டு போராடி தனது 3 மகன்களையும் படிக்க வைக்க வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் கடந்த 2021ம் ஆண்டு தனது 63 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். தாய் இறந்தது முதல் சோகத்தில் வாழ்ந்து வந்த மகன்கள் தங்கள் தாய் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்த கருவில் சுமந்து தங்களை கரை சேர்த்த தாய்க்கு பெருமை சேர்க்க சொந்த ஊரில் கோயில் கட்ட முடிவு செய்தனர்.
5 அடி உயரத்தில் தாய்க்கு சிலை:அதற்காக கட்டட நிபுணர்கள், கைவினை கலைஞர்கள் ஆகியோருடன் ஆலோசித்து தாய்க்கு ரூ. 1 கோடி செலவில் கோயில் கட்டினர். இந்த கோயிலில் தங்கத்தால் செய்யப்பட்ட கலசமும், அம்மாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோயில் கருவறையில் 580 கிலோ எடையில் தாய்க்கு 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
யாக சாலைகள் அமைத்து நான்கு கால பூஜைகளுடன் யாக வேள்வி நடத்தி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் செண்டைமேளம் ஒலிக்க, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கலசங்கள் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.