சென்னை: சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விநாயகா நகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர் பொழிச்சலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். இவரது மகன் சரவணன் (35) மாற்றுத் திறனாளி ஆவார். இந்த நிலையில், சரவணன் கடந்த சனிக்கிழமை அன்று பொழிச்சலூர் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு கோயிலில் உள்ள பூசாரி அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளனின் மகன் தினேஷ் பாபு இருந்துள்ளார். ஏற்கனவே தினேஷ் பாபுவுக்கும், சரவணனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளதால் அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ் பாபு சரவணனை பார்த்து, '' நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என சாதி பெயரை கூறி, கன்னத்தில் அறைந்து உள்ளார். மேலும் சரவணன் அவரை தனது வாக்கிங் ஸ்டிக்கால் தாக்க முன்ற போது, கீழே விழுந்த தினேஷ் பாபுவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாற்று திறனாளி சரவணன் அங்கிருந்து புறப்பட முயன்ற போது, தினேஷ் பாபு அவரை துரத்திச் சென்று அடித்து எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி சரவணன் கீழே விழுந்து உள்ளார். பின்னர் கோவிலில் இருந்த நபர்கள் சரவணனை மீட்டு அனுப்பி வைத்ததாக பாதிக்கப்பட்ட சரவணன் கூறுகிறார்.
இதையும் படிங்க:"தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
மருத்துவமனையில் களேபரம்
பின்னர் மாற்றுத்திறனாளி சரவணன் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன் தினேஷ் பாபுவின் நண்பர்கள் சரவணனை மிரட்டி உனக்கு இங்கே சிகிச்சை அளிக்க முடியாது என கூறி விரட்டியுள்ளனர்.