மயிலாடுதுறை:மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆர்எம்எஸ் (Rail Mail Service) என்ற தபால் நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இது மாலை 6 மணி முதல் காலை 6.40 மணி வரை இயங்கும். இரவு நேரத்தில் விரைவு தபால்கள் அனுப்புவதற்கு பொதுமக்கள் இந்த தபால் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 77 தலைமை மற்றும் துணை அஞ்சலகத்தில் இருந்து வரும் தபால்கள், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 54 தபால் நிலையங்களில் இருந்து வரும் தபால்கள், பதிவுக் கட்டுகளை ஊர்வாரியாக பிரித்து உடனுக்குடன் அனுப்பும் பணி இங்கு நடைபெற்று வருகிறது.
இதில் 36 நிரந்தரப் பணியாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஞ்சல் துறை மூலம் பாஸ்போர்ட், அரசு வேலைக்கான பணி ஆணைகள், பான் கார்டு, வங்கி ஏடிஎம் கார்டுகள் உட்பட பல்வேறு முக்கிய சேவைகள் இரவு நேரத்தில் இங்கு செய்யப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் இயங்கிய இடத்தின் ஒரு பகுதியை அகற்றிவிட்டு, படிக்கட்டுக்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்திற்கு வேறு இடம் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் கூறி பல மாதங்கள் ஆகியும் இதுவரை இடம் ஒதுக்கி கொடுக்காததால், ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்தை திருவாரூர் ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை ஆர்எம்எஸ் அலுவலக உயரதிகாரிகள் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.