மதுரை:ராணி மங்கம்மாள் நிர்வாகம் செய்வதற்காக 1670ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது. ராணி மங்கம்மாள் தனது ஆட்சியின்போது இந்த அரண்மனையின் பால்கனியில் இருந்து மதுரை முழுவதையும் பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. அதுவே காந்தி அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பழமையான காந்தி அருங்காட்சியமாக திகழும் இந்த அருங்காட்சியகத்தில், காந்தியின் படங்கள், காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை உள்ளன. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுகளை சுமந்து, மதுரையின் அடையாளமாக மட்டுமன்றி, தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா தளமாகவும் திகழும் காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர்.
பிற மாநிலங்களைச் சார்ந்தோர் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் வருகை தந்து பார்வையிடுகின்ற இடமாகவும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் திகழ்கிறது. இந்த நிலையில் காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியல் தொடர்பாக பேசி வருகின்ற காரணத்தால், காந்தி நினைவு அருங்காட்சியகம் என்ற பொது அடையாளத்திற்கு வேறொரு பார்வை விழுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், “தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய விடுதலைக்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம்.