தமிழ்நாட்டில் 10 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்படும் வேலூர்:குடியாத்தம் பகுதியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 9) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், நெசவாளர்களுக்கு தற்போது 600 ரூபாய் அளவிற்கு கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், அதனை உயர்த்தி 1,000 ரூபாயாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். மேலும், நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு, ரூபாய் 4 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில், 20 கோடி ரூபாய் மதிப்பில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இன்று இரண்டாவது இடமாக குடியாத்தத்தில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைத்தறி நெசவாளர் நலனை கருதி, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக கூறிய அமைச்சர் காந்தி, அதனை நெசவாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விசைத்தறி அமைக்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் அளவிற்கு மானிய நிதியினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நெசவாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் வீடுகளை 9 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்திக் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அமைச்சர், நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தினை உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, “தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் கூலி குறைவாக உள்ளது, அதனை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறிய அளவிலான நெசவாளர் கைத்தறி பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், 125 கைத்தறி நெசவாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 300 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
மேலும், 450 முதல் 600 ரூபாய் வரை ஊதியம் என, ஓராண்டிற்கு சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும். ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் அமைய உள்ள இந்த கைத்தறி பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி வகைகளை அரசே கொள்முதல் செய்து, லாபத்திற்கு விற்பனை செய்து, அந்த லாபத்தினை கைத்தறி நெசவாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "கவனத்தை ஈர்க்கச் சீண்டிக்கொண்டே இருப்பார்" பாஜக அண்ணாமலை குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேச்சு!