ஈரோடு: சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் விக்கி என்கிற விக்னேஷ்(32). கடந்த பிப்ரவரி 25ஆம் வேலைக்குச் சென்ற இவர் வீடு திரும்பாததை அடுத்து, விக்னேஷ் காணாமல் போனதாக அவரது தந்தை நாகராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, காணாமல் போனதாகக் கூறப்பட்டு வந்த விக்னேஷை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(35) என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை அன்று சரணடைந்தார்.
மேலும், விக்னேஷை கொலை செய்து பள்ளத்தில் புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சசிகுமாரை கிராம நிர்வாக அலுவலர் சபரி, சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, சசிகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக 6 பேருடன் சேர்ந்து விக்னேஷை கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதையும் படிங்க:அதிமுகவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த புரட்சி பாரதம் கட்சியினர்...விழுப்புரத்தில் நடந்தது என்ன?
அதன் பின்னர், விக்னேஷை கொன்று புதைத்ததாக அடையாளம் காட்டிய இடத்தில், சத்தியமங்கலம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் விக்னேஷின் உடலை எடுத்தனர். அதனை அடுத்து, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் தலைமையிலான மருத்துவர்கள் குழு உடற்கூராய்வை மேற்கொண்டனர்.
அதனையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சசிகுமாரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சசிகுமாரின் மனைவி, மாமனார் உட்பட 6 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே, தலைமறைவாக இருந்தவர்கள் சத்தியமங்கலம் அடுத்த ராமபையலூர் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து, சரணடைந்த சசிகுமாரின் மனைவி கண்மணி(27), மாமனார் தேவராஜ்(55) மற்றும் நண்பர்கள் ஜபுருல்லா(34), முட்டைக் கண்ணன்(26), முத்துக்குமார்(23), மெட்டல் மோகன்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சசிகுமார் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்ததை விக்னேஷ் போலீசாரிடம் காட்டிக் கொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நண்பர்கள் விக்னேஷுக்கு அதிக அளவு மது அருந்தச் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்!