கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத வழக்கில் கடன் வாங்கியவரின் தந்தையை தாக்கிய இரண்டாம் நிலை காவலரை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவரது மகன் கார்த்திக் சிலரிடம் கடனை வாங்கி விட்டு திருப்பி தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே கார்த்திக்குக்கு கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து கடனை திருப்பித் தருமாறு கேட்டனர். கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வரும்போது கார்த்திக் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. எனவே, அவரது தந்தை வேல்முருகனிடம் உங்கள் மகன் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு வேல்முருகன், ‘என் மகன் கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை. கடன்வாங்கியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது,' எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனால் கார்த்திக்கிடம் கடன் கொடுத்தவர்கள் இது குறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.